கேப்டன் பவுமா வருத்தம்: "இந்திய அணி தரத்தை வெளிப்படுத்தியது, எங்களால் போதுமான ரன்களை சேர்க்க முடியவில்லை".
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஒரே அணிக்கு எதிராகச் சொந்த மண்ணில் இரண்டு தொடர்களையும் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) இழந்திடக் கூடாது என்ற 39 ஆண்டுகால அச்சுறுத்தலை இந்திய அணி முறியடித்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டி ஹாக் 106 ரன்களும், கேப்டன் பவுமா 48 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசித் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
271 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். தொடரின் முந்தைய இரண்டு போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் அழுத்தத்தைச் சமாளித்து 121 பந்துகளில் 116 ரன்கள் (12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதம் ஆகும். இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த 6வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.
ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 75 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி 65 ரன்கள் குவித்து அரை சதம் அடித்தார். இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 75 ரன்களை அடித்த ரோஹித் சர்மா, 27 ரன்களைக் கடந்தபோது சர்வதேசக் கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 14வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், அவர் சச்சின், கோலி, டிராவிட் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் இலக்குடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
தென்னாப்பிரிக்கக் கேப்டன் டெம்பா பவுமா, "இன்றைய போட்டியை உற்சாகமானதாக மாற்ற விரும்பினோம். ஆனால் பேட்டிங் வரிசையில் எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை. விக்கெட்டுகளை இழக்கும்போது நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும். இந்திய அணி தங்கள் தரத்தை வெளிப்படுத்தியது. அதற்காக அவர்களுக்குப் பாராட்டுகள். 50 ஓவர் போட்டியில் நீங்கள் ஒருபோதும் ஆல் அவுட் ஆக விரும்ப மாட்டீர்கள்" என்று தோல்விக்குப் பிறகு தெரிவித்தார்.
