சிவகார்த்திகேயன் படத்திற்குத் தடை கோரி வழக்கு! ஜனவரி 2-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவு!
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தின் கதை தன்னுடையது என இணை இயக்குனர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தனது ‘செம்மொழி’ கதையைத் திருடிப் படம் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இரு கதைகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா ஆகியோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடைய ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது எனக் கூறி இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். 1965-ஆம் ஆண்டு நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையைத் தான் 2010-ஆம் ஆண்டிலேயே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறிப் பாராட்டுப் பெற்றுள்ளேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் வழியாக நடிகர் சூர்யாவிடம் இந்தக் கதை சென்றது; சூர்யா அதனை இயக்குனர் சுதா கொங்கராவிடம் வழங்கினார். முதலில் ‘புறநானூறு’ என்ற பெயரில் சூர்யா நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டு, இப்போது அதே கதை ‘பராசக்தி’ என்ற பெயரில் தயாராகியுள்ளது” என ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தான் அளித்த புகாரின் மீது எழுத்தாளர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், நிபுணர் குழு மூலம் கதையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்றுதானா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். இது குறித்து வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, வரும் ஜனவரி 2-ஆம் தேதியன்றே விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். பொங்கல் ரிலீஸுக்குத் தயாராக இருந்த ‘பராசக்தி’ படத்திற்கு இந்த வழக்கு முட்டுக்கட்டையாக அமையுமா என்ற பரபரப்பு கோலிவுட் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.
.jpg)