மரம் சார்ந்த விவசாயத்தில் பெரும் புரட்சி! டெல்லிக்கு சத்குருவை அழைத்த அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!
இந்தியாவின் விவசாயக் கொள்கைகளில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் வளர்க்கும் மரங்கள் அவர்களுக்கே முழுமையாகச் சொந்தமாக வேண்டும் என்றும் ஈஷா யோகா மைய நிறுவனத் தலைவர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஈஷா யோகா மையத்தின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் நடைபெற்ற “நீடித்த நிரந்தர விவசாயம் - ஒருமுறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு” என்ற கருத்தரங்கில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார். சுமார் 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் திரண்டிருந்த இந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சத்குருவின் வழிகாட்டுதல்களை வெகுவாகப் பாராட்டினார். “காவேரியைக் காக்க வேண்டும் என்ற சத்குருவின் வேண்டுகோள் இன்று ஒரு தேசத்தையே காப்பாற்றும் உத்வேகமான இயக்கமாக மாறியுள்ளது. மரம் மண்ணை வளமாக்குவதுடன் நமக்கு ஆக்சிஜனையும் வழங்குகிறது. மரம் இருந்தால் மட்டுமே நமது உயிர் வாழ்வது சாத்தியமாகும். நான் இங்கு வெறும் பேச மட்டும் வரவில்லை; அக்ரோ ஃபாரஸ்ட்ரி எனப்படும் காடு வளர்ப்பு விவசாயத்தைக் கற்றுக்கொள்ளவும் வந்திருக்கிறேன். எதிர்காலத்தில் இந்திய அரசாங்கம் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கும். இதற்காக வேளாண் அமைச்சகத்தின் வல்லுநர் குழுவைச் சத்குருவிடம் அனுப்பி வைத்து, அவரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்வோம். டெல்லிக்கே சத்குருவை அழைத்து, ஆலோசனைகளை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் ஒரு பெரும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சத்குரு, மத்திய அமைச்சரிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்தார். “விவசாயத்திற்கு எளிமைப்படுத்தல் தேவையில்லை; விவசாயத்திற்குத் தான் ‘விடுதலை’ தேவை. விவசாயிகள் தங்கள் நிலத்தில் எதை விளைவித்தாலும் அது அவர்களுக்கே சொந்தமாக வேண்டும். 8 அடி ஆழத்திற்கு கீழ் இருப்பவை நமக்குச் சொந்தமில்லை என்ற ஆங்கிலேயர் காலத்துச் சட்டம் இன்றும் நீடிப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாகச் சந்தன மரம், செம்மரம் வளர்த்தால் அது அரசுக்குச் சொந்தம் என்ற சட்டத்தை மாற்ற வேண்டும். மரம் சார்ந்த விவசாயமே நமது மண்ணையும் நதிகளையும் காக்கப் போகிறது. காடுகளைக் காக்கும் ரேஞ்சர்கள், விளைநிலங்களில் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ‘டேஞ்சராக’ மாறக் கூடாது. கொள்கை அளவில் மாற்றங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளுக்குச் சட்ட ரீதியான உரிமைகளை வழங்கினால் மட்டுமே நமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறும்” என ஆவேசமாக வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்பி தம்பிதுரை, கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் மற்றும் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
