நேரில் வந்த உதயநிதி, இபிஎஸ் முதல் ட்விட்டரில் பதிவிட்ட விஜய் வரை; “எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் கேப்டன்!”
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேரில் வர இயலாத தலைவர்கள் குறித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விஜய் மலேசியாவில் இருப்பதால் வர முடியவில்லை; முதலமைச்சர் உடல்நிலை காரணமாக வரவில்லை. ஆனால் எல்லோரும் தங்கள் அன்பைச் செலுத்தி வருகிறார்கள்” எனத் தெளிவுபடுத்தினார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை முதல் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நேரில் வந்து அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல். முருகன், செல்வப்பெருந்தகை, சீமான் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் வர முடியாதவர்களும் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் புகழஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். இது கேப்டன் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு" என்றார்.
குறிப்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வராதது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "தமிழக வெற்றி கழகத்திற்கு முறையாக அழைப்பு விடுத்தோம். இருப்பினும், விஜய் தற்போது 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியாவில் இருப்பதை நேற்றுதான் பார்த்தோம். அதனால் அவர் வரவில்லை என்றாலும் ட்விட்டரில் தனது அஞ்சலியைப் பதிவு செய்துள்ளார். அதேபோல், கள்ளக்குறிச்சி சென்றிருந்த காரணத்தினால் முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அதனால்தான் அவரால் வர முடியவில்லை என்றும் தம்பி உதயநிதி ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார். சூழ்நிலை காரணமாகச் சிலர் வர முடியாமல் போயிருக்கலாம், ஆனால் கேப்டன் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் என்பதால் யாருக்கும் வர வேண்டாம் என்ற எண்ணம் இருக்காது" என முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.
"கேப்டன் மறைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டாலும், இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தலைவர். அவர் செய்த நலத்திட்டங்களும், கலைத்துறை மற்றும் அரசியல்துறையில் அவர் செய்த உதவிகளுமே இந்த மக்கள் கூட்டத்திற்கு அத்தாட்சி. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதிலிருந்து அவரை யாராலும் நீக்க முடியாது" எனப் பிரேமலதா உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டார். திருமாவளவன் தற்போது ஊரில் இருப்பதாகவும் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
