மாணவர்களைக் கண்டால் முதலமைச்சரின் களைப்பு பறந்துவிடும்! விமர்சனங்களைத் திருத்திக் கொள்ளும் அரசு இது!
பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றாலே தான் என்றும் அஞ்சி ஓடமாட்டேன் என்றும், நீங்கள் கேட்கும் கேள்விகள் மூலமே செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்கிறேன் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (Chennai Press Club), மன்ற உறுப்பினர்களுக்கான புத்தாண்டு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரைத் தமிழ் செய்தியாளர் வாசிப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் மெட்ராஸ் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர்.
விழாவில் மேடையேறிப் பேசிய அமைச்சர், தனது அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்களை நகைச்சுவை ததும்பப் பகிர்ந்து கொண்டார். “சமீபத்தில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மிகுந்த களைப்பிலும் இருந்த முதலமைச்சர் அவர்கள், அங்குப் புதிதாகத் திறக்கப்பட்ட மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிடலாம் எனத் தானாக முன்வந்தார். மாணவச் செல்வங்களைப் பார்க்கும்போதும், அவர்களுடன் உரையாடும்போதும் முதலமைச்சருக்கு எவ்வளவு பெரிய களைப்பு இருந்தாலும் அது அப்படியே பறந்து போய்விடும். அந்த அளவிற்கு மாணவர்கள் மீது அவர் அக்கறை கொண்டுள்ளார்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர்களுடனான தனது உறவு குறித்துப் பேசிய அமைச்சர், “பிரஸ் மீட் என்று நீங்கள் வந்தால் நான் ஒருபோதும் தெறித்து ஓடமாட்டேன். ஒரு செய்தியாளர் ஒரு கேள்வியைக் கேட்டால், அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை எனது அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். வெறுப்பு அரசியல், சொல்லாததைச் சொன்னதாகத் திரிப்பது போன்ற சவால்களை நாங்கள் சந்தித்தே ஆக வேண்டும். 90 நாட்களில் எத்தகைய செய்திகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார். நியாயமான விமர்சனங்கள் வரும்போது அதனை ஏற்றுத் திருத்திக் கொள்ளும் அரசாகவே எங்களது அரசு செயல்படுகிறது” எனத் தெரிவித்தார். தமிழகக் கல்வித்துறையின் அனைத்துச் சாதனைகளுக்கும் வழிகாட்டியாக முதலமைச்சரே இருக்கிறார் எனத் தனது உரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் சுட்டிக்காட்டினார்.
