நிஜத்தை உளறிய பாகிஸ்தான் மந்திரி! - இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். ராணுவம் நிலைகுலைந்ததை ஒப்புக்கொண்ட இஷாக் தர்!
எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்ட இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ட்ரோன் தாக்குதல், அந்நாட்டின் இதயப் பகுதியான ராவல்பிண்டியை எந்த அளவுக்குச் சிதைத்துள்ளது என்பதைப் பாகிஸ்தான் அமைச்சரே உளறிக்கொட்டிப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய ராணுவம் அண்மையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ‘நூர் கான்’ விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) தாக்குதல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதிகள் பயன்படுத்தும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தளம், இந்திய ட்ரோன்களின் தாக்குதலால் உருக்குலைந்து போனதை இதுவரை மறைத்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் முகத்திரையை அந்நாட்டு அமைச்சரே கிழித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேச முயன்று, தனது நாட்டின் பலவீனத்தைத் தானே போட்டுடைத்தார். “எங்கள் மீது 80 ட்ரோன்கள் ஏவப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள எங்கள் படைகள் 36 மணி நேரம் கடுமையாகப் போராடின” என அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்தார். இதன் மூலம், 80 ட்ரோன்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதும், மிக முக்கிய விமானப்படைத் தளம் ஒன்றரை நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்ததும் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலேயே இந்தியா புகுந்து அடித்திருப்பது, அந்நாட்டின் பாதுகாப்பு ஓட்டைகளை அப்பட்டமாக்கியுள்ளது. தனது பேச்சில், “நாங்கள் அமைதி காக்கிறோம், இல்லையென்றால் பதிலடி கொடுத்திருப்போம்” என இஷாக் தர் சமாளிக்க முயன்றாலும், இந்தியாவின் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு முன்னால் பாகிஸ்தான் ராணுவம் கைகட்டி நின்றதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. அடியை மறைக்க நினைத்துப் பாகிஸ்தான் அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்டது, அந்நாட்டு ராணுவத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தையும், இந்தியாவிற்குப் பெரும் ராஜதந்திர வெற்றியையும் தேடித்தந்துள்ளது.
