செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்துவதில் ‘முறைகேடு’ புகார்! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
சென்னை மாநகர் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் நடைமுறைகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெண்டர் விதிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், டெண்டர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, விசாரணையை ஜனவரி மாதத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட 153 முக்கிய இடங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய 459 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கான ரூ. 5 கோடி மதிப்பிலான டெண்டரை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, 'பேட்ரியா செக்யூரஸ் சொல்யூஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 11 ஆண்டுகளாகக் காவல்துறைக்குத் தொழில்நுட்பப் பணிகளைச் செய்து வரும் தங்களது நிறுவனம், இந்த டெண்டரில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. டெண்டர் வெளியிடப்பட்ட பிறகு ஐந்து முறை அதன் தொழில்நுட்ப விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இது டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, சென்னை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். "டெண்டர் காலம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டரில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து ஏலதாரர்கள் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டெண்டர் நடைமுறைகளுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த மனு குறித்து விரிவான விசாரணை நடத்த வழக்கை ஜனவரி மாதத்திற்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
.jpg)