"ஆண்டுக்கு 40 நாள் கூட வேலை கிடைக்காது!" - 100 நாள் வேலைத்திட்டப் பெயர் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் சதி!
மாநாட்டில் பேசிய முதலமைச்சர், "பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேறும் என்ற பெரியாரின் கொள்கைப்படிதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறான். கடந்த காலங்களில் உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது, கால் வலிக்க வலிக்க நின்று ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்குச் சுய உதவிக்குழு கடன்களை வழங்கினேன். இன்று வரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 520 கோடி ரூபாய் கடன் வழங்கிப் புதிய சாதனையை (Record) திராவிட மாடல் ஆட்சி படைத்துள்ளது. சொந்த ஊரை விட்டு வேலைக்கு வரும் பெண்களுக்காக 19 தோழி விடுதிகளை உருவாக்கியுள்ளோம். ஆனால், மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு பெண்களுக்கு என்ன செய்தது? 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெறுபவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள்தான். இன்று அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றி, நிதியைக் குறைத்து, மொத்தமாக அந்தத் திட்டத்தையே இழுத்து மூடும் வேலையைப் பாஜக அரசு செய்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய ஸ்டாலின், "பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை பொய்யைச் சொல்லி வருகிறார். பாஜக-வின் எடுபிடியாகச் செயல்படும் அவர், கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே சராசரியாக 47 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளால் இனி 40 நாள் கூட வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தையும், பெண்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கும் பாஜக-வின் இந்த நடவடிக்கையைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று ஆவேசமாக முழங்கினார். திராவிட இயக்கத் தலைவர்கள் பெற்றுத் தந்த பெண் விடுதலையைப் பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு 2026 தேர்தலில் பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
