3,956 கோயில்களில் குடமுழுக்கு; 29,149 பணிகள் தீவிரம்! அறநிலையத்துறையில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் பட்டியல்!
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் எனச் சிலர் கட்டியெழுப்பிய போலி பிம்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூள் தூளாக்கிவிட்டார் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய நாட்காட்டியை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த காலங்களில் இல்லாத வகையில் இத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். “திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இதுவரை 3,956 கோயில்களில் குடமுழுக்குச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 946 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும், டிஎன்பிஎஸ்சி மூலம் 794 புதிய பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தில் இருந்த 1,357 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
கோயில் மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழகம் முழுவதும் 12,803 கோயில்களில் 29,149 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. உபயதாரர்கள் மூலம் மட்டும் 1,471 கோடி நிதி வரப்பெற்றுள்ளது, இது பொதுமக்கள் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. ‘ஒரு கால பூஜை’ திட்ட வைப்பு நிதி 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அர்ச்சகர்களுக்கு மாதம் 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணி நிதி 2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத தங்கங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்ததன் மூலம் ஆண்டுக்கு 17.81 கோடி வட்டி வருவாய் ஈட்டப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோயில் நிலங்களிலிருந்து நிலுவையில் இருந்த 400 கோடி வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. 2,800 ஜோடிகளுக்குக் கட்டணமில்லாத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட கோயில்களில் குடிநீர், கழிவறை மற்றும் விரைவு தரிசன வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இடைத்தரகர்களைத் தடுக்கக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க வேண்டும் என்பவர்கள், அரசு நிர்வாகத்தில் நடக்கும் இந்தச் சாதனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை முதலமைச்சர் உடைத்து எறிந்துவிட்டார்” எனத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
