சதி என்ற பேச்சுக்கே இடமில்லை! வாக்கி டாக்கி மூலம் எச்சரித்தும் அலட்சியம்! - 41 பேர் பலியானதற்குத் தவெக-வின் திட்டமிடல் குளறுபடியே காரணம் என விளக்கம்!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலுக்குச் “சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம்” என விஜய் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளைக் கரூர் மாவட்ட நிர்வாகம் இன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.
சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்ட நெரிசல் குறித்து முன்கூட்டியே கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டதே இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதான காரணம் என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தற்போது சிபிஐ வசம் சென்றுள்ளது. இந்தச் சூழலில், “கூட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து திட்டமிட்டு நெரிசலை உருவாக்கினார்கள்” என்ற தொனியில் தவெக நிர்வாகிகள் சிபிஐ விசாரணையின் போது முன்வைத்த வாதங்களுக்குக் கரூர் மாவட்ட நிர்வாகம் தற்போது விரிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அதிகரித்ததே நெரிசலுக்கு நேரடி காரணமாகும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் நெரிசல் உருவாவது குறித்து அந்த இடத்திலேயே இருந்த தவெக நிர்வாகிகளுக்கு ‘வாக்கி-டாக்கி’ (Walkie-talkie) மூலமாக உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் தவெக-விற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டதாகவும், பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து எச்சரித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைச் சீர்செய்யத் தவறிவிட்டதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவ இடத்தின் வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் அனைத்தும் கூட்டத்தின் அளவைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியையே காட்டுவதாக மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. “அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் பாகுபாடும் காட்டப்படவில்லை; மாறாக, உயிரிழப்புகளுக்குக் காரணமான சட்டமீறல்கள் குறித்து மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். சிபிஐ-யின் இரண்டாம் கட்ட விசாரணை நாளை டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்தப் பதிலடி தவெக தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)