தமிழகம், புதுவை, கேரள தொகுதிகளுக்கு மும்முரமான ஏற்பாடு; கோட்டையைக் பிடிக்க 'இபிஎஸ்' வியூகம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்குப் போட்டியிட மொத்தம் 9,500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், முதலில் டிசம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், கட்சியினரின் பலத்த கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 31-ஆம் தேதி (இன்று) வரை கால அவகாசத்தை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை'யில் கடந்த சில நாட்களாகக் கட்சியினர் சாரை சாரையாக வந்து மனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் (மயிலம் தொகுதி), கே. பாண்டியராஜன் (விருதுநகர் தொகுதி) மற்றும் கட்சி செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் (மயிலாப்பூர் தொகுதி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த முறை தங்களது விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
விருப்ப மனு தாக்கல் இன்றுடன் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக வேட்பாளர் நேர்காணல் (Interview) குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில், தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு மற்றும் கட்சிப் பணி குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும். இதன்பின்னர் தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆளுங்கட்சியான திமுக-விற்கு இணையாக அதிமுக-வும் தனது தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளது, தமிழக அரசியல் களத்தைச் சுறுசுறுப்பாக்கியுள்ளது.
.jpg)