கொலை மிரட்டலுக்குப் பயந்து 26 நாட்கள் மௌனம்! மார்க்கெட்டில் சிக்கிய காமக் கொடூரன்!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் தூய்மைப் பணி செய்யும் 57 வயது மூதாட்டியிடம், உதவி செய்வது போல் நடித்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலை ஒக்கியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் செல்போன் கடையில் கண்டிகை பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் (57) என்ற மூதாட்டி துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1.12.2025 அன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த அவர், கடையின் கனமான ஷட்டரைத் திறக்க முடியாமல் திணறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞரிடம் ஷட்டரைத் திறக்க உதவி கேட்டுள்ளார். அந்த நபரும் உதவி செய்வது போல ஷட்டரைத் திறந்துகொடுத்துவிட்டு, யாருமே இல்லாத சமயம் பார்த்து மூதாட்டியைப் பின்தொடர்ந்து கடைக்குள் நுழைந்துள்ளார்.
கடைக்குள் சென்ற அந்த நபர், மூதாட்டியைக் கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளிப் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி பயத்தில் கூச்சலிடவே, "ஏற்கனவே என் மீது பல வழக்குகள் உள்ளது; இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவேன்" என மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார். கொலை மிரட்டலுக்குப் பயந்த மூதாட்டி இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் 26 நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (27.12.2025) ஓஎம்ஆர் பி.டி.சி மார்க்கெட் பகுதியில் அதே நபர் உலவுவதைக் கண்ட மூதாட்டி, உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு கண்ணகி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியிடம் அத்துமீறிய நபர் கந்தன்சாவடி அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த சந்துரு (34) என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்துக் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பரபரப்பான ஓஎம்ஆர் சாலையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)