காந்தியை மீண்டும் கொல்கிறது பாஜக! திமுக கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை குழு அமைப்பு!
மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்ட மாற்றங்கள் மாநிலங்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும், பிரதமர் மோடி மிகச்சிறந்த முறையில் நடித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் மத்திய அரசின் கொள்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரையில் நடித்துப் புகழ்பெற்றார். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவரை விட மேலான ஒரு நடிகராகப் பிரதமர் மோடி திகழ்கிறார். ஒரு பக்கம் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது, மறுபுறம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். இது வெறும் நடிப்பு” எனச் சாடினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், “மகாத்மா காந்தியை பாஜக அரசு இரண்டாவது முறையாகக் கொலை செய்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால், இப்போது 40% சுமையை மாநில அரசு மீது ஏற்றியுள்ளனர். வாயில் நுழையாத பெயரையும், யாருக்கும் புரியாத பெயரையும் இந்தத் திட்டத்திற்கு வைத்துள்ளனர். 125 நாட்கள் வேலை என்று சொல்லிவிட்டு, நடைமுறையில் 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளனர். இது வரும் தேர்தலில் பாஜகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்றார்.
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் (SIR) குறித்துப் பேசிய ப.சிதம்பரம், “நாங்கள் SIR-ஐ எதிர்க்கவில்லை, ஆனால் அதில் நடந்துள்ள குளறுபடிகள் மிகப்பெரிய மோசடி. 66 லட்சம் பேருக்கு முகவரி இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறுவது நகைப்புக்குரியது. உயிருடன் இருப்பவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது திட்டமிட்ட மோசடியாகவே தெரிகிறது” எனக் குற்றம்சாட்டினார். திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் தலைமை ஏற்கனவே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்துள்ளது. ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. விஜய் வருகை கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள், தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் செயல்படுத்துவோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
