பொங்கல் பரிசு உங்கள் சொத்தை விற்றுக் கொடுக்கிறீர்களா? - 10 லட்சம் கோடி கடனைச் சுட்டிக்காட்டி தமிழக அரசை விளாசிய சீமான்!
வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு நல்ல எதிரி வேண்டும்” என நடிகர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “அவர் ஒரு எதிரியைத் தீர்மானித்து வைத்திருக்கிறார், அது யார் என்பதை அவரிடமே கேளுங்கள். எங்களைப் பொறுத்தவரை திராவிடமும், ஹிந்தியும்தான் கோட்பாட்டு ரீதியான எதிரிகள்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த சீமான், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஆசிரியர்கள் போராட்டம், பொங்கல் பரிசு, 10 லட்சம் கோடி கடன் மற்றும் திராவிட மாடல் ஆட்சி என அனைத்து விவகாரங்களிலும் தமிழக அரசைத் தனது பாணியில் சரமாரியாகச் சாடினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், சென்னையில் நடைபெற்று வரும் ஆசிரியர்களின் போராட்டத்தை முன்வைத்துத் தனது பேச்சைத் தொடங்கினார். “ஆசிரியர்கள் மூன்று நாட்களாக அல்ல, நீண்ட காலமாகச் சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு வீதியில் நின்று போராடுகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை நிறைவேற்றுவார்கள் என்று பார்த்தால், ஆட்சி முடியப்போகும் சூழலிலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. வெள்ளைக்காரனிடம் விடுதலை கேட்ட ஜனநாயகமா இது? போராடும் ஆசிரியர்களை அடித்து வண்டியில் ஏற்றுவதுதான் நல்லாட்சியா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு கொடுக்க உங்கள் சொத்தை விற்றுக் கொடுக்கிறீர்களா? இது மக்களைக் காப்பாற்றும் வேலை இல்லை, ஓட்டைப் பறிக்கும் வேலை. மகளிர் உரிமைத் தொகைக்காகப் பல்லாயிரம் கோடியைச் செலவிடும் அரசு, கேட்டவர்களுக்கு (ஆசிரியர்களுக்கு) கொடுக்காமல் கேட்காதவர்களுக்குக் கொடுக்கிறது” எனச் சாடினார். மேலும், உதவிப் பேராசிரியர் தேர்வில் அரசுத் திட்டங்களைப் பாராட்டி எழுதச் சொல்வது, கட்சி ஆட்களைத் தேர்வு செய்வதற்கான வேலையே அன்றி வேறில்லை என்றும் விமர்சித்தார்.
பேருந்துகளில் இருந்து ‘தமிழ்நாடு’ என்ற பெயரை நீக்கியது மற்றும் மதுரையில் பாண்டித்துரை தேவர் பெயரை நூலகத்திற்கு வைக்காதது போன்ற விவகாரங்களிலும் சீமான் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். “ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அவர் காளை வளர்த்தாரா அல்லது அடக்கித்தான் காயம் பட்டாரா? ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மூக்கையா தேவர் பெயரை வைத்திருந்தால் என்ன? எங்கள் அடையாளங்களை அழித்து உங்கள் அடையாளங்களை நிறுவுவதுதான் திராவிட மாடலா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இறுதியில் கூட்டணி குறித்த கேள்விக்கு, “நான் எட்டு கோடி மக்களுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கிறேன், எந்தக் கட்சி கூட்டணியும் எனக்குத் தேவையில்லை” எனத் தெம்பாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.
.jpg)