நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்தாமல் இழுத்தடிக்கும் பல்கலைக்கழகம்! ஜனவரி 1-ல் புதிய விடியல் பிறக்குமா?
அண்ணா பல்கலைக்கழக உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றங்களின் அடுத்தடுத்த தீர்ப்புகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மதிக்காமல் மேல்முறையீடு செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் (Constituent Colleges) கடந்த 14 ஆண்டுகளாகத் தற்காலிக அடிப்படையில் 290-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவின் ஒப்புதலோடு முறையாக நியமிக்கப்பட்ட இவர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், “புதிய ஆட்சேர்ப்பு நடக்கும்போது தற்போது பணியாற்றும் தற்காலிகப் பேராசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார். ஆனால், இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட மேல்முறையீட்டு வழக்குகளில், உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வும், பின்னர் உச்ச நீதிமன்றமும், “தற்காலிகப் பேராசிரியர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்; அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் அனுபவத்தைக் கணக்கிட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்” என அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தன.
நீதிமன்றங்களின் இத்தனை உத்தரவுகள் இருந்தபோதிலும், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, அவர்களைப் புதிய பணியாளர்கள் போலக் காட்டிப் பணி நிலைப்பு வழங்க மறுத்து வருகிறது. தற்போதுள்ள 300-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பேராசிரியர்களின் ஒப்பந்தக் காலம் வரும் டிசம்பர் 31, 2025-டன் முடிவடைகிறது. இவர்களில் 80% பேர் முனைவர் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். வரும் ஜனவரி 1, 2026 முதல் அவர்களுக்குப் புதிய பணி ஆணை வழங்கும்போது, அதனைப் பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையாக வழங்க வேண்டும் என்றும், கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அவர்களது ஊதியத்தை உயர்த்தி வழங்க உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியுள்ளது.
