பாஜக ஆடிய ஆட்டத்தை ஆட்டத்தை ஏற்கனவே பார்த்தோம்! - 2026-ல் தனிச் சின்னம் குறித்து கோரிக்கை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் வாக்குகள் பிரியும்; ஆனால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாகத்தான் இருக்கும் என்பதால் திமுக கூட்டணியின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது எனத் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதவாத சக்திகளை ஒழிக்க வைகோ மேற்கொள்ள உள்ள நடைபயணம் மற்றும் 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகள் ‘தனிச் சின்னத்தில்’ போட்டியிட வேண்டியதன் கட்டாயம் குறித்து அனல் பறக்கப் பேசினார். பாஜக-வின் ‘ஆட்டம்’ குறித்த நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு, “அண்ணாமலையின் ஆட்டத்தை ஏற்கனவே பார்த்துவிட்டோம்” என நக்கல் தொனியில் பதிலடி கொடுத்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவுடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருச்சி எம்.பி. துரை வைகோ, செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழலைத் துவம்சம் செய்தார். “விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது, அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர் அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. இதனால் 2026-ல் நான்கு முனைப் போட்டி ஏற்படும். இந்தச் சூழலில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுமே தவிர, திமுக கூட்டணிக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது; உண்மையில் விஜய்யின் வருகை திமுகவின் வெற்றியைத்தான் பலப்படுத்தியுள்ளது” எனப் புதுமையான அரசியல் கணக்கை முன்வைத்தார். கரூர் சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் காரணமல்ல, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜனவரி 2 முதல் வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார் என்றார்.
தொடர்ந்து கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனிச் சின்னம் என்பது அடிப்படை உரிமை. 2021-ல் திமுக சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளுக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ்கள் வந்துள்ளன. அவர்களின் அங்கீகாரமே கேள்விக்குறியாக உள்ள நிலையில், 2026-ல் கூட்டணி கட்சிகள் தத்தமது தனிச் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும். இதனைத் திமுக தலைமை கருத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் ‘தனிச் சின்ன’ கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தார். மதிமுக 10 இடங்களைக் கேட்டதாக வரும் தகவல்கள் பொய் என்றும், இருப்பினும் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறினார். “நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே அரசு இதுதான்” எனத் தமிழக அரசுக்குப் புகழாரம் சூட்டினார்.
பாஜக தரப்பு விமர்சனங்களுக்குப் பதிலளித்த துரை வைகோ, “பாஜகவின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்ப்பீர்கள் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். ஆனால் அண்ணாமலை ஆடிய ஆட்டத்தை கடந்த தேர்தலிலேயே மக்கள் பார்த்துவிட்டனர். 16 கட்சிகளைச் சேர்த்துக் கொண்டுதான் 18 சதவீத வாக்குகளை பாஜக வாங்கியது. அவர்கள் தனித்து நின்றால் மட்டுமே அவர்களின் உண்மையான பலம் என்ன என்பது ஊருக்கே தெரியும்” என எள்ளி நகையாடினார். “மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வேரூன்றக் கூடாது என்பதே எங்கள் லட்சியம்; அதற்காகவே மதுவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வைகோ அவர்கள் களத்தில் நிற்கிறார்” எனத் தனது உரையைத் துரை வைகோ நிறைவு செய்தார்.
