2.22 கோடி குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு! ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
2026-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடும் வகையில், மாநில அரசு இன்று ஒரு மிக முக்கியமான அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
21.12.2025 அன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு சென்றடைய உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசு மொத்தம் ரூ.248,66,17,959/- (இருநூற்று நாற்பத்து எட்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சத்து பதினேழு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது ரூபாய்) நிதி ஒப்பளிப்பு செய்து நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவினம் மற்றும் வெட்டுக் கூலி உள்ளிட்டவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, ஒரு முழு நீளக் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.38/- ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான பிரத்யேகக் குழுக்கள் மூலம் தரமான கரும்புகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன.
அதேபோல், இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் 1 கிலோ பச்சரிசி ரூ.25/- என்ற விலையிலும், சர்க்கரை 1 கிலோ ரூ.48.549/- என்ற பொருளாதார விலையிலும் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்கள் விரைவில் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 புத்தாண்டின் முதல் பரிசாக அமையவுள்ள இந்த அறிவிப்பு, ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
.jpg)