2025: சீர்திருத்தங்களை தேசிய இயக்கமாக மாற்றிய ஆண்டு; 12 லட்சம் வரை வருமான வரி இல்லை!
இந்தியா இன்று உலகளாவிய கவனத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. நான் பலரிடமும் கூறி வருகிறேன், இந்தியா இப்போது 'ரிபார்ம் எக்ஸ்பிரஸ்' (Reform Express) ரயிலில் ஏறிவிட்டது" எனப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது லிங்க்டுஇன் (LinkedIn) பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டை இந்தியாவின் 'சீர்திருத்த ஆண்டு' என வர்ணித்துள்ள அவர், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அடுத்த தலைமுறை மாற்றங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
பிரதமரின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வரிச் சீர்திருத்தம்:
ஜிஎஸ்டி (GST) முறையில் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு வரி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிவாரணமாக ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டம் நீக்கப்பட்டு, 'வருமான வரிச் சட்டம் 2025' கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு:
சிறு நிறுவனங்களுக்கான வரையறை ரூ. 100 கோடி விற்றுமுதல் (Turnover) வரை உயர்த்தப்பட்டுள்ளது. 29 தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 4 எளிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரிக்கும் எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற வளர்ச்சி: '
விட்சித் பாரத் - ஜி ராம் ஜி' (Viksit Bharat-G RAM G) சட்டத்தின் மூலம் 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி மற்றும் கல்வி:
அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 'சாந்தி' (SHANTI) சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வித் துறையில் யுஜிசி (UGC), ஏஐசிடிஇ (AICTE) போன்ற அமைப்புகளுக்குப் பதிலாக 'விட்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்' என்ற ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
"எங்கள் அரசு கட்டுப்பாட்டை விட ஒத்துழைப்பிற்கும், அதிகாரத்தை விட எளிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. 2025-ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தச் சீர்திருத்தங்கள் ஒரு வளமான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவைக் (Viksit Bharat) கட்டியெழுப்ப உதவும்" என்று பிரதமர் தனது கட்டுரையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
