“பொங்கலுக்கு 5000 கொடுங்கள்; இல்லையேல் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - திமுக அரசை விளாசிய இபிஎஸ்!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். இருப்பினும், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பெண்கள் பாதியிலேயே வெளியேறியதும், பெரும்பாலான நாற்காலிகள் காலியாகக் கிடந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்ட இபிஎஸ், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் மற்றும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வடகிழக்கு பருவமழை இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் உள்ள தையூரில் 176-வது சட்டமன்றத் தொகுதிக்கான பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். இதற்காகப் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதிலும், மாலை 5 மணியளவில் எடப்பாடியார் பேசத் தொடங்கிய போது மேடைக்கு எதிரே இருந்த பெரும்பாலான நாற்காலிகள் காலியாகக் காணப்பட்டன. மேலும், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் கணிசமான அளவில் வெளியேறியது கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது பிரச்சாரப் பேருந்தில் இருந்தபடி உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் எவ்வித வரி உயர்வுமின்றி பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கினோம். ஆனால், வருவாய் அதிகரித்துள்ள இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த முறை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இந்த ஆட்சியில் இதுதான் உங்களுக்குக் கடைசி காலம், எனவே இந்த முறையாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி மக்களின் வாழ்த்தைப் பெறுங்கள்” என வலியுறுத்தினார். மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 5500 கோடி அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் வெளியிட்ட ஆடியோவில் குறிப்பிடப்பட்ட 30,000 கோடி ரூபாய் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
அதிமுக-வின் முக்கியத் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான இலவச லேப்டாப் மற்றும் மகளிருக்கான இருசக்கர வாகன மானியத் திட்டம் ஆகியவை மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், மணமக்களுக்குப் பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி கூடுதலாக வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். குறிப்பாக, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, அதில் 25 நாட்களுக்கான நிதியை மாநில அரசே ஏற்கும் எனப் புதிய அறிவிப்பை வெளியிட்டார். கல் கிரஷர்களிடம் 600 கோடி லஞ்சம், நகர்ப்புற உள்ளாட்சித் துறை நியமன முறைகேடுகள் மற்றும் டாஸ்மாக் கூடுதல் கட்டண வசூல் எனப் பல்வேறு ஊழல் புகார்களைப் பட்டியலிட்ட இபிஎஸ், 2026-ல் அதிமுக கோட்டையை மீண்டும் நிலைநாட்ட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
