Apple போன்களையே பெண்கள்தான் தயாரிக்கிறார்கள்!- திராவிட மாடல் சாதனையைக் கூறி ஸ்டாலின் பெருமிதம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காரணம்பேட்டையிலிருந்து மாநாட்டுத் திடல் வரை ஆயிரக்கணக்கான பெண்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று ‘கெத்தாக’ அழைத்து வந்தனர். பல்லடம் சாலையே பெண்களின் இருசக்கர வாகனப் பேரணியால் திணறியது.
மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த மாநாட்டை இவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ள ஆற்றல் மிகு தம்பி செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அவர் எந்தக் களத்தில் இறங்கினாலும் கொடுத்த பணியைச் சிகரம் தொடும் அளவிற்குச் செய்யக்கூடியவர். மேற்கு மண்டல மக்களின் அன்பும், செந்தில் பாலாஜியின் திறமையும் இணைந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது" என்று புகழ்ந்து தள்ளினார். மேலும், "திமுக-வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கைதான் எப்போதுமே ‘ஹீரோ’. பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி உரிமை எனத் திராவிட இயக்கம் செய்த புரட்சியால் தான் இன்று தமிழகப் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். ராஜஸ்தானில் பெண்கள் நகை அணியக் கூடாது எனத் தடை போடும் சூழல் இன்றும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆப்பிள் (Apple) போன்களை அசெம்பிள் செய்யும் தொழிற்சாலைகளில் நம் வீட்டுப் பெண்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்" என்று ‘பஞ்ச்’ பேசி அதிரவைத்தார்.
மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய கனிமொழி கருணாநிதியை ‘கவிஞர், பத்திரிகையாளர், நாடாளுமன்றத்தின் உரிமைக்குரல்’ எனப் பாராட்டிய ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான அரண் என்பதைக் கோடிட்டுக் காட்டினார். தேவதாசி முறை ஒழிப்பு முதல் இன்று உயர்கல்வி வரை பெண்களுக்காகத் திமுக செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டார். இந்த மாநாட்டின் பிரம்மாண்டமும், பெண்களின் இருசக்கர வாகனப் பேரணியும் 2026 தேர்தலுக்கான திமுக-வின் ‘வெற்றி முழக்கமாக’வே பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான பெண்கள் இம்மாநாட்டில் திரளாகப் பங்கேற்றனர்.
