"என் பின்னாடி 95% பாட்டாளி சொந்தங்கள் இருக்காங்க!" - அதிரடிப் பொதுக்குழுவில் அன்புமணி மீது 'பாய்ச்சல்'!
"35 வயசுல மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தேன்.. ஆனா இன்னைக்கு என்னை எதிர்த்து நிக்கிறானே!" எனச் சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அதிரடிப் பொதுக்குழுவில், தனது மகன் அன்புமணி ராமதாஸை நினைத்து டாக்டர் ராமதாஸ் மேடையிலேயே விம்மி விம்மி அழுத சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டனர்.
பொதுக்குழுவில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஐயா, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், "இந்தக் கட்சியை வளர்க்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். 40 வருஷ தியாகத்தைச் சிதைக்க அன்புமணி எடுத்த நடவடிக்கைகள் என் நெஞ்சைப் பிளக்கிறது. யாரோ சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெற்ற தந்தையையே விமர்சனம் செய்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் மகனை நினைத்துக் கண்கலங்கி நிற்கிறேன். இரவு தூக்கத்தில் என் தாய் கனவில் வந்து கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தூக்க மாத்திரை போட்டாலும் எனக்குத் தூக்கம் வரவில்லை" என்று ‘பகீர்’ கிளப்பினார். ராமதாஸ் அழுவதைக் கண்ட தொண்டர்கள் "ஐயா.. ஐயா.." என முழக்கமிட்டு அவரை ஆசுவாசப்படுத்தினர்.
"கட்சி 95 சதவீதம் என் பக்கம்தான் இருக்கிறது; வெறும் 5 சதவீதம் மட்டுமே அவரிடம் (அன்புமணி) உள்ளது. மகனை நினைத்து இழந்த நிம்மதியை, இந்த பாட்டாளி சொந்தங்களை நினைத்துத் தான் திரும்பப் பெறுகிறேன். சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்ற முழு அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுடன் ‘மாஸ்’ கூட்டணி அமைத்து பாடம் புகட்டுவோம்" என்று ஆவேசமாக முழங்கினார். இக்கூட்டத்தில் மதுவிலக்கு, கஞ்சா ஒழிப்பு உள்ளிட்ட 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகனுக்கும் தந்தைக்குமான இந்தப் போர், பாமக-வை அடுத்தகட்டப் பிளவை நோக்கி நகர்த்தியுள்ளதையே இன்றைய சேலம் பொதுக்குழு காட்டியுள்ளது.
