14 வாகனங்கள் முற்றுகை! உயர்நீதிமன்ற வாசலில் சாலையில் படுத்து போராடிய நாய் ஆர்வலர்கள்!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தெரு நாய்களைப் பிடிப்பதற்காக வந்த மாநகராட்சி வாகனங்களை மறித்து, நாய் ஆர்வலர்கள் இன்று அதிகாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவற்றைப் பிடித்துச் செல்ல நீதிமன்றம் சார்பில் மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 14 வாகனங்களுடன் வந்த மாநகராட்சி ஊழியர்களை, நாய் ஆர்வலர்கள் நீதிமன்ற நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிடிப்பட்ட நாய்களை விடுவிக்கக் கோரி சாலையில் படுத்து அவர்கள் நடத்திய போராட்டத்தால், அப்பகுதியில் நீண்ட நேரம் சலசலப்பு நிலவியது.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தெரு நாய்களைப் பிடித்துச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள், அவற்றிற்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு, மீண்டும் அதே பகுதியில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் 14 வாகனங்களில் வந்த மாநகராட்சி ஊழியர்கள், நாய் பிடிக்கும் பணியைத் தொடங்கினர்.
இந்தத் தகவல் பரவியதும், நாய் ஆர்வலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் திரண்டு, வாகனங்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால் ஊழியர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இதற்கிடையில், உயர்நீதிமன்ற பொன்விழா நுழைவாயில் வழியாக 3 வாகனங்கள் எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டன. பணி முடிந்து அந்த வாகனங்கள் வெளியே வந்தபோது, பிடித்துள்ள நாய்களைத் திறந்து விடக்கோரி ஆர்வலர்கள் வாகனங்களைச் சிறைப்பிடித்தனர்.
ஒரு கட்டத்தில் ஒரு சிலர் சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களை நகர விடாமல் தடுத்ததால் சூழல் கைகொடுக்கும் நிலையை எட்டியது. அப்போது, “நீதிமன்ற வளாகத்திற்குள் எந்த நாயும் பிடிக்கப்படவில்லை” என்று மாநகராட்சி ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த நாய் ஆர்வலர்கள், ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாகச் சோதனையிட்டனர். வாகனங்களுக்குள் நாய்கள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல வழிவிட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தால் அதிகாலை வேளையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
.jpg)