சுனாமி நினைவு தினத்தில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி! கூட்டணி குறித்து இப்போதே சொல்ல முடியாது என அதிரடி!
சுனாமி ஆழிப் பேரலையின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காசிமேட்டில் கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு மர்மமான பதிலளித்துள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அதிமுக சார்பில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் படகில் கடலுக்குள் சென்று, மலர் தூவியும் பால் ஊற்றியும் உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த மரியாதையைச் செலுத்தினார்.
இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் குறித்தும், அவர் மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “அரசியலில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்; அதையெல்லாம் இப்போது பொதுவெளியில் கூற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தைக் கூட்டணியில் இணைக்கலாமா வேண்டாமா என்பது குறித்துக் கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். பொதுவாகவே கூட்டணி பேச்சுவார்த்தைகள் என்பவை மிகவும் அந்தரங்கமானவை, அவை நான்கு சுவருக்குள் நடக்கும் விஷயங்கள்; அதை இப்போதே சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எதை எப்போது சொல்ல வேண்டுமோ, அதை அப்போதுதான் சொல்ல முடியும்” என ‘சஸ்பென்ஸ்’ வைக்கும் விதமாகப் பதிலளித்தார். அதிமுக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், ஓபிஎஸ் குறித்த ஜெயக்குமாரின் இந்த நிதானமான மற்றும் மர்மமான பதில், இரு தரப்பிற்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
.jpg)