“எம்ஜிஆருக்குப் பிறகு விஜயைப் பார்க்கிறேன்!” - ஈரோட்டில் தவெக அலுவலகத்தைத் திறந்து வைத்து அதிரடிப் பேச்சு!
ஆற்று வெள்ளத்தை அணை போட்டுத் தடுக்க முடியாது; சுழல் காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது; அதுபோல தவெக தலைவர் விஜய் கோட்டையில் அமர்வதை எவனாலும் தடுக்க முடியாது!” என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் பேரிடியாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத் திறப்பு விழா மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தவெக அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக தலைமை மீது தனது கடும் அதிருப்தியையும், விஜய் மீதான தனது அளவற்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
"அதிமுகவில் 50 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்து பாடுபட்ட என்னைச் சாதாரணமாகத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஆனால், என்னை அவர்கள் தூக்கி எறிந்தாலும், என்னைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள இங்கே கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர்" என ஆவேசமாகப் பேசிய செங்கோட்டையன், "மலேசியா சென்று திரும்பியுள்ள தலைவர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் வெளிவந்த பிறகு தமிழ்நாட்டின் பல கட்சிகள் முடங்கிப் போகும்" எனத் தெரிவித்தார். மேலும், விஜயமங்கலத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரம்மாண்டக் கூட்டத்தைப் பார்த்த போது, தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆரையே நேரில் பார்ப்பது போல் உணர்ந்ததாகவும், எம்ஜிஆருக்குப் பிறகு இத்தகைய ஒரு மக்கள் அலையைத் தான் இப்போதுதான் காண்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விஜய்யுடனான தனது நெருக்கம் குறித்துப் பேசிய அவர், "தளபதி விஜய்யுடன் நான் 5 முறை நேரடியாகவும், 45 முறை தொலைபேசி வாயிலாகவும் பேசியிருக்கிறேன். ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர், 4 படம் நடித்தால் கிடைக்கும் 1000 கோடி ரூபாயைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் பணிக்கு வந்திருக்கிறார். அவரது இந்தத் தூய்மையான பயணத்தை யாராலும் தடுக்க முடியாது" என உறுதிபடத் தெரிவித்தார். சிப்காட் கழிவுநீர் பிரச்சினை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தமிழகத்தில் தவெக ஆட்சி மலரப் போவது உறுதி என்றும், வரும் தேர்தலில் தவெக தலைவர் யாரைக் காட்டுகிறாரோ அவரே சட்டமன்ற உறுப்பினராக வருவார் என்றும் செங்கோட்டையன் ஆரூடம் கூறினார். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியேறி தவெக பக்கம் சாய்ந்திருப்பது, கொங்கு மண்டல அரசியலில் ஒரு மாபெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)