“முசிறி கோட்டைக்கு இவர்தான் வேட்பாளர்!” - டி.டி.வி. தினகரன் முன்கூட்டியே அதிரடி அறிவிப்பு!
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையிலேயே, வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்து தமிழக அரசியலில் அதிரடிப் புயலைக் கிளப்பியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்.
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “எங்கள் கொள்கைக்கு உடன்படுபவர்களுடன் மட்டுமே கூட்டணி; எதார்த்தம் உணர்ந்து செயல்படுவோம்” எனப் பேசிய தினகரன், 50, 75 ஆண்டுகால கட்சிகளுக்கே அமமுக இப்போது சிம்மசொப்பனமாகத் திகழ்வதாக மார்தட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் இன்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேர்தல் களத்தில் தனது முதல் காயை நகர்த்தியுள்ளார். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ‘மெகா’ ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தினகரன், முசிறி சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் அவர்கள் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துத் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், “மற்ற கட்சிகளைப் போல இத்தனை இடங்கள் வேண்டும், அத்தனை இடங்கள் வேண்டும் என நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டோம். எதார்த்த சூழலை உணர்ந்து, கூட்டணி தர்மத்தின்படி யாருக்கும் பாதிப்பில்லாமல் செயல்படுவோம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அமமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்த அணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என அதிரடியாகத் தெரிவித்தார். வெறும் 8 ஆண்டுகளில் 200 தொகுதிகளில் கட்சி வலிமையாக வளர்ந்துள்ளதாகவும், 50 ஆண்டுகளைக் கடந்த கட்சிகளே அமமுக-வின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வரும் ஆட்சியில் அ.ம.மு.க நிச்சயம் பங்குபெறும். தகுதியுள்ள வேட்பாளர்களுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் வெற்றிக்கு நான் முழுமையாகத் துணையாக நிற்பேன்” என உறுதி அளித்த தினகரன், முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்ததன் மூலம் மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார். தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகங்களை வகுத்து, வேட்பாளரையும் அறிவித்த டி.டி.வி. தினகரனின் இந்த அதிரடி நகர்வு, திருச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)