தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தரிசனம்; மலர் அலங்காரத்தில் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும் திருமலை!
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைணவத் திருவிழாக்களில் மிக முக்கியமான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை மங்கல வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்கச் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 'பூலோக வைகுண்டம்' என அழைக்கப்படும் திருமலை, லட்சக்கணக்கான மலர்களாலும் வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, உண்மையான வைகுண்டமே பூமிக்கு இறங்கி வந்தது போன்ற பேரெழிலுடன் காட்சியளிக்கிறது.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஜீயர்கள் முன்னிலையில், ஆகம விதிப்படி சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் முழங்கச் சொர்க்கவாசல் (வைகுண்ட துவாரம்) திறக்கப்பட்டது. உற்சவர்கள் மற்றும் ஜீயர்கள் முதலில் பிரவேசித்ததைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்துச் சொர்க்கவாசல் வழியாகப் பிரவேசித்தார். அவருடன் ஆந்திர மாநில துணை சபாநாயகர் ரகுராமகிருஷ்ண ராஜு, அமைச்சர்கள் அச்சன்நாயுடு, பய்யாவுலு கேசவ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் தரிசனம் செய்தனர். தரிசனத்திற்குப் பின் ரங்கநாயக்க மண்டபத்தில் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில் எதிரே ஏழு தலை ஆதிசேஷன் மீது மகாவிஷ்ணு, மகாலட்சுமி தாயாருடன் சயனித்திருக்கும் பிரம்மாண்டமான மலர் கண்காட்சி பக்தர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்; இதனைப் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு 'இராப்பத்து' உற்சவம் தொடங்குகிறது. இதில் நம்மாழ்வார் அருளிய திவ்ய பிரபந்த பாசுரங்கள் நாளொன்றுக்கு 100 வீதம் பாராயணம் செய்யப்பட உள்ளன. ஆன்லைன் டோக்கன் வைத்துள்ள பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை டோக்கன் இல்லாத பக்தர்களும் நேரடியாக இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை காலை 5 மணிக்குத் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
.jpg)