திருப்பூரில் தவெக மாபெரும் ஆலோசனை கூட்டம்: 234 தொகுதிகளிலும் விஜய்தான் வெற்றி பெறுவார்!
தமிழகத்தில் மத்திய அரசு வர வாய்ப்பே இல்லை என்றும், தேவையற்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் தங்களின் நேரத்தைச் வீணடிக்க விரும்பவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திருப்பூரில் கூடியுள்ள இந்த எழுச்சியைக் காணும்போது, இதுவே அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தெரிகிறது. பல கட்சிகள் கூட்டம் கூட்டினாலும் இத்தகைய உத்வேகம் இருக்காது. தமிழகத்தை ஆளப்போகும் வெற்றி நாயகன் தளபதியை யாராலும் வீழ்த்த முடியாது" என முழங்கினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், தவெக குறித்து பாஜக மாநிலத் தலைவர் முன்வைத்த விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இது தமிழ்நாடு; இங்கு மத்திய அரசு வர வாய்ப்பே இல்லை. தேவையற்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் எங்கள் கட்சியின் டெபாசிட்டை இழக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களின் லட்சியம் வேறு, எங்களின் வெற்றி இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். கோடி கோடியாகக் கொட்டிய சினிமா வருமானத்தைத் துறந்துவிட்டு மக்கள் சேவைக்காகத் தளபதி வந்துள்ளார். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் அவர்தான் முதலமைச்சர்" என அதிரடியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு தமிழக மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றமாகத் தளபதி விஜய் இருப்பார். பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். திருப்பூரில் குப்பை மேலாண்மை சரியில்லை, தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்; தொழில் முடங்கியுள்ளது. இவை அனைத்தையும் சீரமைத்து ஒரு நல்லாட்சியைத் தலைவர் வழங்குவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் பயம் காரணமாகவே தற்போது பொங்கல் பரிசு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வருகின்றன" என்று சாடினார்.
