புதிய பாம்பன் பாலம் முதல் 164 வந்தே பாரத் ரயில்கள் வரை; உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பில் இந்திய ரயில்வே மகுடம்!
சாதாரண மக்களை மையமாகக் கொண்டு, இந்திய ரயில்வேயை உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பாக மாற்றும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை 2025-ஆம் ஆண்டில் மிகப்பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது.
வேகமான பயணம், பாதுகாப்பான கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் இந்திய ரயில்வே நிகழ்த்தியுள்ள இந்த மாற்றங்கள், பயணிகளின் அனுபவத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளன. காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ரயில் சத்தம் புதிய நம்பிக்கையோடு ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகம் 2025-ஆம் ஆண்டிற்கான தனது செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. “மக்களின் ரயில் பயணத்தை ஒரு சிறப்பான அனுபவமாக மாற்றுவதே எங்கள் இலக்கு” என்ற முழக்கத்தோடு, இந்த ஆண்டு பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் மிக முக்கியச் சாதனையாக, ஏப்ரல் 6, 2025 அன்று திறக்கப்பட்ட புதிய பாம்பன் பாலம் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கும் (Vertical-Lift) ரயில் கடல் பாலமான இது, 2.08 கிலோமீட்டர் நீளத்தில் ராமேஸ்வரத்தை நிலப்பகுதியுடன் இணைத்து ஒரு பொறியியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது. இதேபோல், இமயமலையின் சவாலான பாதையில் 272 கி.மீ நீளமுள்ள உதம்பூர்–ஸ்ரீநகர்–பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் 2025-ல் நிறைவடைந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மிசோரமின் ஐஸ்வால் நகரம் முதல் முறையாக இந்திய ரயில் வரைபடத்தில் இணைக்கப்பட்டதும் இந்த ஆண்டின் மற்றுமொரு வரலாற்றுத் தருணமாகும்.
வேகமான பயணத்திற்காக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இதில் 2025-ல் மட்டும் 15 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்காக 13 அம்ரித் பாரத் ரயில்களும், புஜ் - அகமதாபாத் இடையே நமோ பாரத் ரயிலும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பண்டிகைக் கால நெரிசலைச் சமாளிக்க 43,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி ரயில்வே சாதனை படைத்துள்ளது. பாதுகாப்புத் துறையிலும் அபரிமிதமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. 2004-14 காலகட்டத்தில் 1,711 ஆக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை, 2025-26-ல் வெறும் 11 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, 6,117 நிலையங்களில் இலவச வைஃபை மற்றும் பயணிகளுக்கான ஒருமுனை தீர்வான ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 99.2% மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்க இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ரயில்வே அமைச்சகம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
