சென்னையின் வரலாற்று சின்னம்: விக்டோரியா பப்ளிக் ஹால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி! Chennai’s Iconic Victoria Public Hall Opens for Public: A Walk Through 135 Years of History

32 கோடியில் புதுப்பொலிவு! சுவாமி விவேகானந்தர், காந்தி, அண்ணா கால்பதித்த வரலாற்றுத் தடம் மீண்டும் மக்கள் வசம்!

சென்னையின் 135 ஆண்டுகால வரலாற்று அடையாளமான விக்டோரியா பப்ளிக் ஹால், கலைநயம் மாறாமல் புனரமைக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

சென்னையின் தொன்மை வாய்ந்த அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா பொது அரங்கம் (Victoria Public Hall), சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, இன்று முதல் பொதுமக்களுக்காகத் தனது கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பார்வையிட, இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்தனர்.

1888-ஆம் ஆண்டு ராபர்ட் சிசோல்ம் வடிவமைப்பில், நம்பெருமாள் செட்டியாரால் இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், சென்னை மாநகரின் கலைச் சிறப்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது. சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தியின் உரைகள் நிகழ்ந்த தளம், அண்ணாவின் நாடகங்கள் அரங்கேறிய மேடை, அண்ணா - எம்.ஜி.ஆர் முதன்முதலில் சந்தித்த இடம் எனப் பற்பல வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டது இந்த அரங்கம். மேலும், சென்னையில் முதன்முதலில் மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது, எரிவாயு விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தது மற்றும் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது எனப் பல 'முதல்' நிகழ்வுகளுக்கு இந்த அரங்கம் மௌன சாட்சியாக இருந்துள்ளது.

சிதைந்து போயிருந்த இந்த அரங்கினை, அதன் பழமை மாறாமல் நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் தமிழ்நாடு அரசு சீரமைத்துள்ளது. 48 மீட்டர் நீளமும், 34 மீட்டர் கோபுர உயரமும் கொண்ட இந்தக் கட்டிடத்தில் வெளிப்புற மற்றும் உட்புற மரத்தளங்கள் நேர்த்தியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அரங்கைப் பார்வையிட வருபவர்கள், சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வரலாம். நாள் ஒன்றுக்கு 6 ஸ்லாட்டுகள் ஒதுக்கப்பட்டு, ஒரு ஸ்லாட்டிற்கு 60 பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று விக்டோரியா ஹாலைப் பார்வையிட்ட பொதுமக்கள் கூறுகையில், “வெளியே இருந்து பார்த்ததை விட, உள்ளே சென்னையின் 135 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்தியிருப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது. நீதிக்கட்சியின் தொடக்கம் முதல் கலை, இலக்கியம் வரை அனைத்தும் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைநயம் மாறாமல் இதனைப் புனரமைத்த தமிழக அரசுக்கு நன்றி. இதுபோல மற்ற வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். சென்னையின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாக விக்டோரியா பப்ளிக் ஹால் உருவெடுத்துள்ளது.




Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk