ஓடும் காரில் சிஎன்ஜி சிலிண்டர் வெடிப்பு! பெட்ரோல் பங்கிற்குள் எரிந்தபடி சென்ற கார் - பகீர் வீடியோ!
தெலங்கானா மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை அணைத்ததால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன.
தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் காட்கேசரிலிருந்து உப்பல் நோக்கி இன்று ஒரு ஓம்னி கார் சென்று கொண்டிருந்தது. காட்கேசர் எல்லையில் உள்ள அன்னோஜிகுடா பகுதியில் கார் வந்தபோது, அதில் இருந்த சி.என்.ஜி. (CNG) சிலிண்டரில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், பதற்றத்தில் காரை நிறுத்திவிட்டு உடனடியாகக் கீழே இறங்கினார். ஆனால், பீதியில் அவர் காரின் ஹேண்ட் பிரேக்கைப் போடத் தவறியதால், தீப்பிடித்து எரிந்த கார் தானாகவே உருண்டு சென்று சாலையோரத்தில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்தது.
கொழுந்துவிட்டு எரிந்தபடி ஒரு கார் தங்களை நோக்கி வருவதைக் கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அங்கு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் மரண பயத்தில் சிதறி ஓடினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் கார் பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தின் மீது மோதி மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கும். ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மின்னல் வேகத்தில் சுதாரித்துக் கொண்டு தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் குதித்தனர்.
பங்கில் இருந்த தீயணைப்புக் கருவிகளை (Fire Extinguishers) எடுத்து வந்த ஊழியர்கள், எரியும் காரின் மீது ரசாயனங்களைத் தெளித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் பத்து நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ஊழியர்களின் இந்தத் துரிதமான வீரச் செயலால் ஒரு பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது; இருப்பினும் ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அன்னோஜிகுடா பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
