2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் ‘ஜி ராம் ஜி’ சட்டம்: ராகுல், சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை!
குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை ‘மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம்’ எனக் குறிப்பிட்டு, அதனை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அதிகாரமிக்க அமைப்பான ‘காங்கிரஸ் காரிய கமிட்டி’ (CWC) கூட்டம், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால், சசி தரூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயர் மாற்ற விவகாரம் உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த அடையாளத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ள மத்திய அரசு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் - ஜி ராம் ஜி’ (VB-G RAM G) என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் ‘திட்டமிட்ட படுகொலை’ என மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதிப் பங்கீட்டை 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளதன் மூலம் மாநிலங்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதனை முன்வைத்து நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்களை நடத்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது தவிர, வரும் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான முதற்கட்ட தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஒடுக்குமுறை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள் போன்ற விவகாரங்களில் பாஜக-விற்கு எதிராகக் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதும் இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
.jpg)
