"குரூப் 4 தேர்வு டிசம்பர் 20-ல்!" - டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டுத் திட்டம் மற்றும் சாதனை அறிக்கை!
தமிழக இளைஞர்களின் அரசு வேலை கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025-ஆம் ஆண்டிற்கான சாதனை அறிக்கை மற்றும் 2026-ஆம் ஆண்டிற்கான மெகா திட்டங்களை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விடப் பல மடங்கு வேகத்துடன் செயல்பட்டு, 20,471 தேர்வர்களைத் தேர்வாணையம் பல்வேறு அரசுப் பணிகளுக்குத் தெரிவு செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டை விட 9,770 தேர்வர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் கலந்தாய்வின் போது காலிப்பணியிட விவரங்கள் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி மற்றும் தேர்வுக்கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 1007 குறைவு காலிப்பணியிடங்கள் வெற்றிகரமாக நிரப்பப்பட்டுள்ளன.
தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான புதிய ஆண்டுத் திட்டத்தையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை ஜூன் 23-ஆம் தேதியும், குரூப் 2/2A தேர்வுக்கான அறிவிக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதியும் வெளியாகி, முறையே செப்டம்பர் 6 மற்றும் அக்டோபர் 25-ல் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் குரூப் 4 தேர்வு அறிவிக்கை அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகி, டிசம்பர் 20, 2026-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக அனைத்து முக்கியத் தொகுதிகளுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
