வட சென்னையில் இனி முழுவீச்சில் மருத்துவச் சேவை! 13.6 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகப் பெருமிதம்!
தமிழக அரசின் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இனி வாரத்தில் ஒரு நாள் என்பதற்குப் பதிலாக, வியாழன் மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் இன்று நடைபெற்ற 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, பயனாளிகளுக்குக் கலைஞர் மருத்துவக் காப்பீடு அட்டை, கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துணவுப் பெட்டகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களை அவர் உடனடியாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அரியலூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த முகாம்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், இனி வாரந்தோறும் சனிக்கிழமை மட்டுமின்றி வியாழக்கிழமைகளிலும் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இந்த முகாம்களில் வழங்கப்படுகின்றன. அதிகாரிகளும் உடன் இருப்பதால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த காப்பீட்டு அட்டை மற்றும் சான்றிதழ்கள் மக்களின் குடியிருப்புப் பகுதியிலேயே வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்" என்றார்.
மேலும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்த அமைச்சர், "இதுவரை தமிழகம் முழுவதும் 800 முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 12 லட்சத்து 36 ஆயிரம் பேர் (ஒட்டுமொத்தமாக 13.6 லட்சம்) பயனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் 11 முகாம்கள் மூலம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக, வட சென்னை முழுவதும் இந்த முகாம்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
