“எம்.ஜி.ஆர் ஆட்சியில் போடப்பட்ட உத்தரவை எதிர்க்கலாமா?” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக-வைச் சாடிய மார்க்சிஸ்ட்!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் எம்.ஜி.ஆர் அரசின் முடிவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால், அவரை எம்.ஜி.ஆரின் விசுவாசி அல்ல, மோடி மற்றும் அமித்ஷாவின் விசுவாசி என்றுதான் மக்கள் காரி உமிழ்வார்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதிமுக எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள அதிமுக, தற்போது பாஜகவின் இந்துத்துவா குரலில் பேசுவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே இது குறித்துத் தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதை அவர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நிலவும் சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அரசியல் ரீதியான ஒரு முடிவு, அது வேறு. ஆனால், பாஜகவின் அதே இந்துத்துவா மொழியில் பேசத் துணியும் கட்சியாக அதிமுக மாறியிருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள ஒரு இயக்கம் இவ்வளவு மோசமான முடிவுகளை எடுப்பதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறை சார்பில் திருப்பரங்குன்றம் வரலாறு குறித்த நூல் வெளியிடப்பட்டது. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்த்துரையுடன் வெளியான அந்த நூலில், திருப்பரங்குன்றத்தில் ‘தீபத் தூண்’ எது என்பது குறித்துத் தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரை விடச் சிறந்த நிர்வாகியா எடப்பாடி பழனிசாமி? அல்லது எம்.ஜி.ஆருக்கு இருந்த கடவுள் பக்தியை விட எடப்பாடிக்கு அதிக பக்தி வந்துவிட்டதா?” என அடுக்கடுக்கான வினாக்களை முன்வைத்தார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு எதிராக இன்று எடப்பாடி பழனிசாமி செயல்படுவது, அவர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்குத் துரோகம் இழைப்பதைக் காட்டுகிறது எனச் சாடிய சு.வெங்கடேசன், “பாஜகவின் சொற்களை அப்படியே எதிரொலிக்கும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அவர் எம்.ஜி.ஆரின் விசுவாசி கிடையாது; மாறாக மோடி மற்றும் அமித்ஷாவின் விசுவாசியாகவே செயல்படுகிறார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்” என அதிரடியாகத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நிலவும் வரலாற்று உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்துச் செயல்படுவதாக அவர் தனது பேட்டியில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
