வங்கதேசத்தில் இந்து இளைஞர் படுகொலை: அமெரிக்கா கடும் கண்டனம் - 10 பேர் கைது!
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 27 வயது இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
இந்தக் கொடூரச் செயலை "பயங்கரமான செயல்" எனச் சாடியுள்ள அமெரிக்கா, குற்றவாளிகள் மீது கருணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தற்போது அதிவிரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் மைமென்சிங் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு மனிதநேயமற்ற கொலைச் சம்பவம், சர்வதேச அரங்கில் அந்நாட்டின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி, தீபு சந்திர தாஸ் என்ற 27 வயது இந்து இளைஞர், மத அவமதிப்பு செய்ததாகக் கூறப்படும் ஒரு ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்முறை கும்பலால் குறிவைக்கப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் கொண்ட அந்த வெறிபிடித்த கும்பல், அந்த இளைஞரைத் தடிகளால் அடித்துக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அவரது உடலை நடுரோட்டில் வைத்துத் தீயிட்டு எரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தற்போது அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட விதம் ஒரு பயங்கரமான செயல். எந்தவொரு சமூகத்திலும் மத ரீதியான வன்முறைகளை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. வங்கதேசத்தில் உள்ள அனைத்துச் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் அந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடைய ஒவ்வொரு குற்றவாளியும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசு தற்போது தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதனை ‘விரைவு விசாரணை தீர்ப்பாயத்திற்கு’ (Fast-track Tribunal) மாற்றி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஒரு சில வாரங்களிலேயே குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை உள்ளிட்ட உச்சபட்ச தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து ஐநா சபைக்கும் புகார்கள் சென்றுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்தக் கண்டனம் வங்கதேச அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
.jpg)