பைக் ரேஸ், போதைக்கு நோ! - புத்தாண்டு பாதுகாப்பு குறித்து தமிழக காவல்துறை அதிரடி எச்சரிக்கை.
2026-ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று இரவு நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தலைமையகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் டிஜிபி (படைத்தலைவர்) உத்தரவின் பேரில் இந்த 'மெகா' பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 617 துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், 2528 காவல் ஆய்வாளர்கள், 5540 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 93,500 ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த காவலர்கள் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று இரவு வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். கடற்கரைகள், கோயில்கள், ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். "குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் உடனடியாக பறிமுதல் (Seize) செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களைத் தடுக்கத் தனிப்படையினர் சீருடை அணியாமல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி பெற்று நடத்தப்படும் நிகழ்ச்சிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுகளைத் தாண்டக்கூடாது என ஏற்பாட்டாளர்களுக்குக் கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சட்டவிதிமுறைகளை மதித்து, பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிப் புத்தாண்டைக் கொண்டாடுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
