சமூக நீதி அல்ல... தமிழகத்தில் நடப்பது சமூக அநீதி! 9 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் மாநிலம்!
திமுக அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருவதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பெரியார் பெயரைச் சொல்லத் தகுதியில்லை என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெறவுள்ள தனியார் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தடைந்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். மதுரை விமான நிலையத்தில் அவருக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ‘ஸ்கோர்’ செய்தார். "தமிழகத்தில் இன்று ஆசிரியர் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை, செவிலியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பினரும் திமுக அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி" என ஆணித்தரமாகக் கூறினார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், "நிர்வாகம் என்பது சீர்குலைந்துவிட்டது. தமிழகத்தின் கடன் சுமை தற்போது 9,55,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி கட்டுவதற்கே 62,000 கோடி செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை வைத்து மக்கள் வாழ்வதற்கு வழி செய்யாமல், மணல் கொள்ளை மற்றும் கனிம வளக் கொள்ளை மூலம் ஆளுங்கட்சியினர் பணத்தைச் சுருட்டுகிறார்கள். தென் மாவட்டத்தில் ஒரு 'காட்ஃபாதர்' பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு கனிம வளங்களை அழித்து வருகிறார். இது குறித்து நிச்சயம் சிபிஐ விசாரணை வரும்" என எச்சரித்தார். மேலும், தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு வெளியிட்ட தரவுகள் பொய்யானவை என்றும், வெறும் 8.8% முதலீடுகள் மட்டுமே வந்துள்ளதாகவும் ஆவணங்களுடன் தான் நிரூபித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சமூக நீதி குறித்துப் பேசுகையில் திமுகவைத் தோலுரித்த அன்புமணி, "ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திச் சமூக நீதியை நிலைநாட்டுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்கக் கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலினுக்கு மனமில்லை. கர்நாடக உயர்நீதிமன்றமே மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தலாம் எனத் தீர்ப்பு வழங்கிய பிறகும், அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்லித் தப்பிக்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் நடப்பது சமூக நீதி அல்ல, சமூக அநீதி. இவர்களுக்குப் பெரியார் பெயரைச் சொல்லத் தகுதியில்லை" எனச் சாடினார். கூட்டணி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "விரைவில் ஒரு பெரிய கூட்டணி முடிவாகும், பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
