"6 வருஷமா ஏமாத்துறாங்க.. இனி பொறுக்க முடியாது!" - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆட்சியரிடம் கிராமத்தினர் ஆவேசம்!
தென்மாவட்டங்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவது யார் என்ற மோதல் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. "நூற்றாண்டு பழமையான எங்கள் ஜல்லிக்கட்டை கிராம பொது கமிட்டியிடமே ஒப்படைக்க வேண்டும்" என வலியுறுத்தி, அவனியாபுரம் கிராம மக்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'தார்மீகப் போராட்டமாக' மனு அளித்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகமே ஒரு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம பொது கமிட்டி நிர்வாகிகள், "அரசாங்கமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் கிராமத்தினர் யாருக்கும் துளி அளவுகூட விருப்பமில்லை. அமைதிக் கூட்டம் என்ற பெயரில் எங்களைத் தொடர்ந்து அதிகாரிகள் சித்திரவதை செய்கிறார்கள். பலமுறை மனு கொடுத்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" எனச் செய்தியாளர்களிடம் ‘காட்டம்’ தெரிவித்தனர்.
அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளும் அடங்கிய கிராமப் பொதுக் கமிட்டிக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்காவிட்டால், கிராம மக்களின் அதிருப்தி போராட்டமாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. "பாரம்பரியம் காக்கப்பட வேண்டும், அரசு நிர்வாகம் ஜல்லிக்கட்டை விட்டு ஒதுங்க வேண்டும்" என்ற முழக்கத்துடன் ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டிருப்பது, மதுரையின் பொங்கல் களமான அவனியாபுரத்தில் இப்போதே ‘கள நிலவரத்தை’ சூடாக்கியுள்ளது.
