சட்டமன்றத்தில் ஓடி ஒளிந்துவிட்டு வெளியே வந்து பீலா விடுகிறார்! ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுக தான் பிதாமகன்!
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலை எதிர்கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி உளறிக் கொட்டுவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் கால ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து நேரடி சவால் விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி குறித்துத் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுத்து அமைச்சர் ரகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியைத் தூர்வாரி எடுத்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், "அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேசக்கூட அஞ்சி நடுங்கும் அடிமை பழனிசாமி, தற்போது சூனா பானா வேடம் தரிக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கிவிட்டு, கலெக்டர் அலுவலகத்தைத் தற்காலிகமாக மார்க்கெட் கமிட்டியில் வைத்துவிட்டுப் போனவர் நீங்கள். திமுக அரசு வந்த பிறகுதான் முறையான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து பழனிசாமிக்கு ஏன் வயிறு எரிகிறது? திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறுகிறார். 2015 பெருவெள்ளத்தின் போது தன்னார்வலர்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களில் கூட ஜெயலலிதா படத்தை ஒட்டித் தமிழ்நாட்டின் மானத்தை உலகிற்கே காட்டியவர்கள்தானே நீங்கள்? ஸ்டிக்கர் ஒட்டுவதில் நீங்கள் தான் பிதாமகன்" எனச் சாடினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவூட்டிய அமைச்சர், "பரமக்குடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு கொலைகள், சாத்தான்குளம் இரட்டை மரணம் எனச் சந்தி சிரித்த சம்பவங்கள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது? இதையெல்லாம் செய்துவிட்டுச் சிறப்பான ஆட்சி கொடுத்ததாகச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்துக் கேள்வி எழுப்பும் பழனிசாமி, 2019-க்குப் பிறகு ஜெயலலிதா கொண்டு வந்த அந்தத் திட்டத்தையே முடக்கியவர் என்பதை மறக்க வேண்டாம். நேருக்கு நேர் பேசத் தயாரா எனக் கேட்கும் பழனிசாமிக்கு ஒன்று சொல்கிறேன், அதற்கு எதற்குத் தனி மேடை? சட்டமன்றத்திலேயே பேசலாமே! அங்கே முதலமைச்சர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியில்லாமல், வெளிநடப்பு எனப் புறமுதுகு காட்டி ஓடும் உங்களுக்கு ஓபன் சேலஞ்ச் ஒரு கேடா?" என அனல் பறக்கும் வினாக்களை எழுப்பியுள்ளார்.
