“தற்காலிகப் பணி எனத் தெரிந்தே சேர்ந்தனர்!” - பணி நிரந்தரப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சதி எனச் சாடல்!
தேர்தல் நெருங்கும் வேளையில், தொழிலாளர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு இடைத்தரகர்கள் குளிர்காய நினைக்கிறார்கள்; அவர்களிடம் பணியாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல்வேறு புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்த அவர், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் போராட்டத்தின் பின்னணியில் இடைத்தரகர்களின் தவறான வழிகாட்டுதல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தை விடத் தற்போது டெங்கு உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை அடையாறு மண்டலத்தில் சுமார் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்டவர்கள், இது ஒரு தற்காலிகப் பணி என்பதை முழுமையாக உணர்ந்துதான் பணியில் சேர்ந்தனர். ஆனால், தேர்தல் நெருங்குவதைப் பயன்படுத்திக் கொண்டு சில இடைத்தரகர்கள், ‘சென்னைக்கு வந்தால் பணி நிரந்தரம் வாங்கித் தருகிறோம்’ எனத் தவறான வாக்குறுதி அளித்துப் பணியாளர்களைப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றும் இத்தகைய நபர்களிடம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்” என எச்சரித்தார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த அதிமுக ஆட்சியில் 2012 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் 60-க்கும் மேல் இருந்தது. ஆனால், தற்போது பொது சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது சாதனைதான்” என்றார். போதைப்பொருள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்திலேயே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால், அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் இன்று பேசுவது விந்தையாக இருக்கிறது. தற்போது கஞ்சா அறுவடை என்பதே தமிழ்நாட்டில் இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது” எனப் பதிலடி கொடுத்தார். இடைத்தரகர்களால் தூண்டிவிடப்பட்ட போராட்டக்காரர்களுடன் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
