மென்பொருள் பராமரிப்பு பணிகளால் அதிரடி அறிவிப்பு; ஜனவரி 2 முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கும்!
புத்தாண்டு பிறப்பையொட்டி அரசுப் பணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களிலும் ஆண்டு இறுதி மென்பொருள் பராமரிப்பு (Software Maintenance) மற்றும் தணிக்கை பணிகள் (Audit) நடைபெற உள்ளன. இதன் காரணமாக, 31.12.2025 மற்றும் 01.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது. மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் முடிந்த பிறகு, வரும் 02.01.2026 (வெள்ளிக்கிழமை) முதல் இந்த மையங்கள் மீண்டும் வழக்கம் போல் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்" என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சான்றிதழ்கள் பெறவும் ஆதார் திருத்தங்கள் செய்யவும் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, ஜனவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு பொதுமக்கள் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
