"ரெங்கா.. ரெங்கா.." கோஷத்தில் அதிர்ந்த ஸ்ரீரங்கம்; சொர்க்கவாசல் வழியாகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பிரவேசம்!
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், 'பூலோக வைகுண்டம்' எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை மிகுந்த பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. தனுர் லக்னத்தில் ரத்தின அங்கியில் எழுந்தருளிய நம்பெருமாளைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருநெடுந்தாண்டகத்துடன் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களைக் கடந்து இன்று இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளை எட்டியுள்ளது. நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களைக் கவர்ந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டார். பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் மற்றும் ஜொலிக்கும் ரத்தின அங்கியில் திருச்சுற்று வலம் வந்த நம்பெருமாள், அதிகாலை 5.45 மணிக்கு 'பரமபத வாசல்' எனப்படும் சொர்க்கவாசலைக் கடந்தார். அந்த வேளையில் அங்குக் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "ரெங்கா.. ரெங்கா..", "கோவிந்தா.. கோவிந்தா.." என முழக்கமிட்டது விண்ணைப் பிளந்தது.
சொர்க்கவாசல் வழியாகக் கடந்து வந்த நம்பெருமாள், திருக்கொட்டகை பிரவேசம் கண்டருளி, பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று இரவு 11 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்குப் பொதுஜன சேவை சாதிக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீணை வாத்திய இசையுடன் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
.jpg)