சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள்; 15 எஸ்பிக்களுக்கு டிஐஜியாக பதவி உயர்வு - இரவோடு இரவாக தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இன்று நள்ளிரவு ஒரு பிரம்மாண்டமான 'நிர்வாக அறுவைச் சிகிச்சையை' மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 70 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பலருக்குப் பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும், 15 எஸ்பிக்கள் டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். காவல்துறையின் மிக முக்கியமான 'சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி' பொறுப்பிற்கு மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக சசாங்க் சாய், ராமநாதபுரம் சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய், விழுப்புரம் சரக டிஐஜியாக அருளரசு மற்றும் நெல்லை சரக டிஐஜியாக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமையிட இணை ஆணையராக மகேஷ்வரனும், நெல்லை மாநகர காவல் ஆணையராக மணிவண்ணனும் பொறுப்பேற்க உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலும் புதிய டிஐஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றங்களைப் பொறுத்தவரை, கோவை மாநகர காவல் ஆணையராக கண்ணனும், தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மண்டல இணை ஆணையர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் இந்த 'மெகா ட்ரான்ஸ்பர்' செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் சில மணி நேரங்களுக்கு முன் வெளியான இந்த உத்தரவு, தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
.jpg)