10 ஆண்டுகளுக்குப் பின் பெரம்பலூரில் மீண்டும் நில அதிர்வு? பொதுமக்கள் அச்சம்!
பெரம்பலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் நில அதிர்வு, அப்பகுதி மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடுகள் பயங்கரமாகக் குலுங்கியதுடன், வீட்டு உபயோகப் பொருட்கள் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் எனப் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மாதேவி சாலைப் பகுதிகளில் இன்று மாலை 6 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. நகரின் முக்கியக் குடியிருப்புகளான மல்லிகை நகர், அகமது நகர், குபேரன் நகர் மற்றும் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிர்வு மிகவும் வீரியமாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்புகளில் இருந்த சோபா, கட்டில் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் திடீரெனக் குலுங்கியதால் மக்கள் நிலைகுலைந்து போயினர்.
வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அருகில் உள்ள தெருக்களிலும் இதே போன்ற அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் பரவியதால், நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், "சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு மதிய வேளையில் நில அதிர்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்திருப்பது எங்களுக்கு மிகுந்த பயத்தைத் தருகிறது" எனத் தெரிவித்தனர்.
தற்போது நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளைப் புவியியல் வல்லுநர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிர்வால் கட்டிடங்களில் விரிசல்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பெரம்பலூரில் நிகழ்ந்த இந்தத் திடீர் அதிர்வு குறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
