கலால் வரி 4 மடங்கு அதிகரிப்பு; மெல்லும் புகையிலை மீதான வரி 100 சதவீதமாக உயர்வு! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!
புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலையை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இந்த அதிரடி வரி விதிப்பால், தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது புகையிலை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காகப் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு தொடர்பான கலால் வரி சட்டத்திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சந்தையில் ஒரு சிகரெட்டின் சராசரி விலை 18 ரூபாயாக உள்ள நிலையில், புதிய வரி விகிதங்களின்படி அதன் விலை 72 ரூபாயாக, அதாவது நான்கு மடங்கு வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதேபோல், மெல்லும் புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் புகையிலை பொருட்களின் விற்பனையைக் குறைப்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாயை அரசு பன்மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்துச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் புகையிலை நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன. விலை உயர்வால் சட்டவிரோத புகையிலை கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். இருப்பினும், மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
