இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடம்! சுவாமி வீதி உலாவுக்குக் கூட வழியில்லை எனப் புகார்!
தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின் ஆட்சியில், தற்போது வீதியெங்கும் கழிவுநீர் தான் ஓடுவதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளைக் கண்டித்துச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மதுரையில் ஏற்பட்டுள்ள இன்றைய பரிதாப நிலையைப் பார்த்தால் கண்ணீரும் வேதனையுமே மிஞ்சுகிறது. எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில், இந்தியாவின் மிகத் தூய்மையான கோவிலாக விருது பெற்றுப் பெருமை சேர்த்தது. ஆனால், இன்றைக்கு மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டு தூய்மை கணக்கெடுப்பில், இந்தியாவில் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது. இது மதுரைக்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்” எனச் சாடினார்.
மதுரை மாநகரின் உள்கட்டமைப்பு குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், “தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று ஸ்டாலின் கூறினார்; ஆனால் இன்றைக்கு மதுரை வீதிகளில் செப்டிக் டேங்க் உடைந்து கழிவுநீர் தான் ஆறாக ஓடுகிறது. குப்பைகள் தேக்கம், குடிநீர் குழாய் உடைப்பு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு எனப் புகார்கள் குவிந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். கோவில் யானை முதல் சுவாமியைச் சுமக்கும் சீர்பாதங்கள் வரை அனைவரும் வீதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை மிதித்துக்கொண்டுதான் கோவிலுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மார்கழி உற்சவத்தில் சுவாமி வைகையாற்றைச் சுற்றி வந்த காலம் போய், இன்று கழிவுநீரைச் சுற்றி வரும் நிலையை இந்தத் திறனற்ற திமுக அரசு உருவாக்கியுள்ளது” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் சவால் விடுகிறார், ஆனால் மதுரையில் ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்தக் கூட அவரிடம் வழியில்லை என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார். கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து இதே அவல நிலை நீடித்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடங்கிக் கிடப்பதாகக் கூறிய அவர், “செயல்படாத இந்த அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு, 2026-ஆம் ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சியை மலரச் செய்வதுதான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க ஒரே தீர்வு” எனத் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
.jpg)