வெற்றி வியூகத்தை வகுக்கும் மருத்துவர் ஐயா! - சேலம் பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள்!
தமிழக அரசியலில் நில அதிர்வை ஏற்படுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உணர்ச்சிப் பிழம்பாக நடைபெற்றது. கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத்தையும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகத்தையும் தீர்மானிக்கும் 27 முக்கியத் தீர்மானங்கள் 'கெத்தாக' நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் மிக முக்கியத் தீர்மானமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, தொகுதிகளைப் பங்கீடு செய்வது மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்வது ஆகிய அனைத்து அதிகாரங்களும் ஒருமனதாக மருத்துவர் ராமதாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை அங்கீகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் 'ஏ' மற்றும் 'பி' (Form A & B) படிவங்களில் கையொப்பமிடும் முழு அதிகாரமும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. இது, அன்புமணி தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் போராடி வரும் சூழலில், கட்சி சட்டப்பூர்வமாக மீட்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. மேலும், ஜி.கே.மணியை நீக்கியதாக அறிவித்த அன்புமணி தரப்பின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த செயற்குழு, பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீகாந்தி ராமதாஸை வாழ்த்திப் பாராட்டியது.
கொள்கை ரீதியான தீர்மானங்களில், வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, முழு மதுவிலக்கு மற்றும் கஞ்சா ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் போராட்டக் களத்தை மீண்டும் முடுக்கிவிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்பது, மேகதாது அணை முயற்சியைத் தடுத்து நிறுத்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் சேலம் இரும்பாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிலத்தை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. "2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சிக் கட்டிலில் அமரும்; அதற்கு மருத்துவர் ஐயாவின் தலைமையே வழிநடத்தும்" எனத் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றது சேலம் மண்ணையே அதிர வைத்தது.
.jpg)