“திமுகவின் கொள்ளைக்குத் துணை போனதா பாஜக?” - கோபிசெட்டிபாளையத்தில் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேச்சு!
திமுக 1995-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து 8 மத்திய அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டு கோடி கோடியாகக் கொள்ளையடித்ததாகவும், அப்போது பாஜகவின் தயவு அவர்களுக்கு இனிக்கவில்லையா என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக அவருக்கு உலகப்புகழ் பெற்ற பவானி ஜமுக்காளம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கடுமையாகச் சாடினார். “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரி, மின்கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது. இப்போது மின்சார பில்லைப் பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. டாஸ்மாக் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று சொல்லிவிட்டு, இப்போது மது விற்பனைக்கு டார்கெட் நிர்ணயிக்கும் மோசமான ஆட்சி நடக்கிறது. மஞ்சள் நகரமாக இருந்த ஈரோடு, இன்று சாயப்பட்டறைக் கழிவுகளால் புற்றுநோய் நகரமாக மாறி வருகிறது” என வேதனை தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்த காரணத்தினாலேயே மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இருப்பினும் மத்திய அரசு அத்திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி வாரந்தோறும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாஜக மீதான மதவாத விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “1995-ல் எங்களோடு கூட்டணி வைத்து 8 அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டு கொள்ளையடித்தபோது பாஜக இனிக்கவில்லையா? பாஜக உண்மையான மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கிறது. ஆனால், கிறிஸ்மஸ் விழா கொண்டாடும் முதலமைச்சருக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லத் தைரியம் இருக்கிறதா? திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியாமல் மன உளைச்சலில் ஒரு தொண்டர் தற்கொலை செய்துகொண்டது இந்த ஆட்சியின் அவலம்” எனச் சாடினார். மேலும், உதயநிதியை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை இறுக்கிப் பிடித்துள்ளதாகவும், 41 சதவீதமாக இருந்த திமுகவின் செல்வாக்கு தற்போது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டதால் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
.jpg)