"88% பெண்களுக்கு பாஜக வேட்டு!" – பல்லடத்தில் சீறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்று வரும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில், இரண்டாம் கட்ட உரையை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசின் திட்டங்களையும், அதற்குத் துணை போகும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாகச் சாடினார். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான அரண் என்பதைப் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அவர் மேடையில் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
மாநாட்டில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதலமைச்சர், "பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேறும் என்ற பெரியாரின் கொள்கைப்படிதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி நடைபெறுகிறது. 1989-இல் கலைஞர் கொண்டு வந்த மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கால் வலிக்க வலிக்க நின்று ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்குக் கடன் உதவிகளை வழங்கி விரிவுபடுத்தினேன். இன்று வரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 520 கோடி ரூபாய் கடன் வழங்கிப் புதிய சாதனையை (Record) படைத்துள்ளோம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக 19 'தோழி' விடுதிகளை உருவாக்கியுள்ளோம். ஆனால், மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு பெண்களுக்கு என்ன செய்தது? 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெறுபவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள்தான். இன்று அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றி, நிதியைக் குறைத்து, மொத்தமாக அந்தத் திட்டத்தையே இழுத்து மூடும் வேலையைப் பாஜக அரசு செய்து வருகிறது. இதனால் கிராமப்புறப் பொருளாதாரமும், பெண்களின் கையில் இருக்கும் பணப்புழக்கமும் அடியோடு பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ‘எடுபிடி’ என்று விமர்சித்த ஸ்டாலின், "பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை பொய்யைச் சொல்லி வருகிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கிற அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டு நாடகமாடுகிறார். ஏற்கனவே சராசரியாக 47 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நிபந்தனைகளால் இனி அந்த 40 நாள் கூட வேலை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதெல்லாம் புரியாமல் எதையாவது பேசி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். பெண்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் பாஜக-வின் இந்த விரோதப் போக்கிற்குத் தமிழகப் பெண்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று ஆவேசமாக முழங்கினார்.
.jpg)