"பெண்கள் படிப்பு தடைபடக்கூடாது!" - புதுமைப்பெண் திட்டத்தின் வியக்கத்தக்க வெற்றியைப் பட்டியலிட்ட 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்று வரும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில், இரண்டாம் அமர்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்காகச் செயல்படுத்திய புரட்சிகரமான திட்டங்களின் வெற்றிச் சரித்திரத்தைப் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார். "திராவிட மாடல் ஆட்சி என்பது பெண்களுக்கான ஆட்சி" என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் ஆணித்தரமாக நிலைநாட்டினார்.
மாநாட்டில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதலமைச்சர், "திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களிடம் 'டிக்கெட் எடுக்கத் தேவையில்லை' என்று சொன்னதுதான் இந்த ஆட்சியின் முதல் வெற்றி. இந்த 'விடியல் பயணம்' திட்டத்தின் மூலம் இதுவரை பெண்கள் 900 கோடி முறை பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்துகிறார்கள். பூ விற்கிறவர்கள், மீன் விற்கிறவர்கள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் வரை இந்தத் திட்டம் ஒரு சுதந்திரத்தைத் தந்துவிட்டது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், பாதியிலேயே படிப்பை நிறுத்திய பெண்களை மீண்டும் கல்லூரிக்குக் கொண்டு வந்த 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் 7 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டு ஒரு மாணவி எனக்கு நன்றி சொன்னதுதான் இந்தத் திட்டத்தின் ஆகப்பெரிய சாதனை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெண்களின் சமையலறைச் சுமையைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 'காலை உணவுத் திட்டம்' மூலம் தினமும் 19 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவதையும், அவர்களின் தாய்மார்கள் நிம்மதியடைவதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். "யாராலும் திருட முடியாத சொத்து கல்விதான். ஒரு பெண் படித்தால் நான்கு தலைமுறை முன்னேறும். இதற்காகவே அரசு வீடுகளின் ஒதுக்கீடு முதல் அசையா சொத்துகளின் பதிவு வரை பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்களில் சரிபாதி நிறுவனங்களைப் பெண்களே தலைமை தாங்கி நடத்துகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவமான சாதனை" என்று முழங்கினார். "பெண்கள் முன்னேறினால்தான் சமூகம் முன்னேறும்" என்ற லட்சியத்தோடு இந்த அரசு தொடர்ந்து பயணிக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
